புதுடெல்லி: திருமணம் நடக்க சில மணி நேரங்களே இருந்தன. ஆனால், மாப்பிள்ளையைக் காணவில்லை. அப்போது 29 வயதான மாப்பிள்ளையும் கட்டழகுப் பயிற்றுவிப்பாளருமான கௌரவ் சிங்கல் என்பவர் டெல்லி தெற்குப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது முகம் மற்றும் மார்பில் 15 முறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
கொலையில் முக்கிய குற்றவாளியான அந்த பயிற்றுவிப்பாளரின் தந்தையை காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது. தெற்கு டெல்லியின் டெவ்லி விரிவாக்கப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கௌரவ் சிங்கலின் இளைய சகோதரரும், உறவினர் ஒருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், அந்தக் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் கெளரவுக்கும் அவரது தந்தைக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றார்.
கெளரவின் தந்தையைப் பிடித்து விசாரித்தால் அதற்கான காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
திரு கெளரவ் கொலையில் யார் மீது எவ்விதத் சந்தேகமும் ஏற்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட கெளரவ்வின் சகோதரர் ஜெய்பிரகாஷ் சிங்கால் கூறுகையில், கௌரவ் எதற்காக, யாரால் கொல்லப்பட்டார் என்று எங்களால் எதுவும் யோசிக்கக்கூட முடியவில்லை. அவர் கொல்லப்படும்போது எவ்வித அலறல் சத்தமும் கேட்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை நன்கு விசாரித்து கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று ஜெய்பிரகாஷ் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

