வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 குறைப்பு: மோடி அறிவிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 குறைப்பு: மோடி அறிவிப்பு

படம்: ஊடகம்

08 Mar 2024 - 6:10 pm

1 mins read

புதுடெல்லி: அனைத்துலக மகளிர் தினம் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தியா முழுவதும் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தில் இந்தியப் பெண்களுக்கு அளிக்கும் பரிசாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

“இது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பெரும் பயனளிக்கும்.

“சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலைக்கு வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வு மேம்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417ஆக இருந்த எரிவாயு உருளை விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,118 ஆக உள்ளது. இப்போது அதில் ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆனால், இதனை எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர்.

சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைக்கவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் தருவாயில் அதன் விலையை ரூ.100 குறைப்பதாக மோடி அறிவித்துள்ளதை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

குறிப்புச் சொற்கள்