இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக சுதா மூர்த்தி அறிவிப்பு

1 mins read
9193f55c-3f50-4326-81a4-b13af71b9297
சமூகசேவை, கல்வி போன்ற பல துறைகளில் திருமதி சுதா மூர்த்தியின் (வலது) பங்களிப்பு அளவிடற்கரியது, ஊக்கசக்தியாகத் திகழ்வது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துரைத்தார். - படம்: நரேந்திர மோடி/எக்ஸ்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நூலாசிரியர், கொடை வள்ளல், சமூக சேவையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருமதி சுதா மூர்த்தியை அதிபர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

இதன் தொடர்பில் திருமதி சுதா மூர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவையில் திருமதி சுதாவின் இருப்பு, நாட்டில் ‘பெண் சக்தி’யின் மேன்மைக்கு வலுவான சாட்சியம் என்று கூறினார்.

இந்திய அதிபர் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமிப்பது வழக்கம். கலை, இலக்கியம், அறிவியல், சமூகசேவை ஆகிய துறைகளில் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவர்.

திருமதி சுதா மூர்த்தி சென்ற ஆண்டு சமூகசேவைக்காக பத்ம பூஷண் விருதையும், 2006ல் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றார்.

கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரான திருமதி சுதாவின் நூல்கள் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது கணவர் திரு நாராயண மூர்த்தி ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். இவர்களின் மருமகன் ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாநாடாளுமன்ற உறுப்பினர்அதிபர்அறிவிப்பு