ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: திரைப்படத் தயாரிப்பாளர் கைது

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்: திரைப்படத் தயாரிப்பாளர் கைது

2 mins read
3a70cfb7-aeb5-45e2-8e25-ce0e9be33c9a
ஜெய்ப்பூரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள்களை (சூடோபெட்ரின்) தேங்காய்த் தூள் மற்றும் சத்து மாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, அப்பிரிவின் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த மாதம் 15ஆம் தேதி அங்கு நுழைந்த காவல்துறை சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய மூவரைக் கைது செய்தது.

அவர்களிடம் இருந்து போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் அனைத்துலக மதிப்பு ரூ.2,000 கோடி.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி நேரில் முன்னிலையாகுமாறு டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், கடந்த 23ஆம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் அழைப்பாணையை ஒட்டினர். ஆனால் அவர் முன்னிலையாகவில்லை.

இதையடுத்து, அவரையும் அவருடன் சேர்ந்து செயல்பட்ட கும்பலையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூரில் அவர் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்