இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்

1 mins read
a122bd44-e8af-4926-b8bd-a3039aa7ae5f
தேர்தல் ஆணையர் அருண் கோயல். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் எதிர்பாராவிதமாகப் பதவி விலகியுள்ளார்.

சனிக்கிழமையன்று (மார்ச் 9) அவரின் பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திரு கோயல் பதவி விலகியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மூவர் இருக்கவேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே எஞ்சியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக திரு கோயல் பதவி விலகியதாக மூத்த அதிகாரிகள் கூறினர். பதவி விலகாமல் இருக்குமாறு இந்திய அரசாங்கம் திரு கோயலைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தமது முடிவில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

திரு கோயலின் தவணைக்காலம் 2027ஆம் ஆண்டு நிறைவடையவிருந்தது. அடுத்த ஆண்டு திரு ராஜீவ்குமார் வகிக்கும் பதவி அவரிடம் ஒப்படைக்கப்படவிருந்தது.

திரு கோயல், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர், அப்பொறுப்பிலிருந்து தாமே விருப்பப்பட்டு ஓய்வுபெற்ற மறுநாள் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

திரு கோயலுக்கு அவசர அவசரமாக அப்பொறுப்பை வழங்கியது குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எனினும், அவரின் நியமனத்துக்கு எதிரான மனு ஒன்றை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட குழு சென்ற ஆண்டு தள்ளுபடி செய்தது.

குறிப்புச் சொற்கள்