புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே கடந்த 2ஆம் தேதி பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட பல மூத்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அந்த முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட பாஜக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் கட்ட பட்டியலில் இடம் பெற இருக்கும் வேட்பாளர்கள் பற்றி பாஜக தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் பாஜக மாநில தலைவர்கள் கலந்து ஆலோசனை நடத்தியதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன.

