பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் காணாத வறட்சியைத் தற்போது காண்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு கிடக்கும் நிலையில், இந்த தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகளும் பயிற்சி மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு, இணையம் வழி வகுப்புகளை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததே இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
எனினும், பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 3,500 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த 30, 40 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியை நாங்கள் கண்டதில்லை.
“காவிரி நதிநீர் தேவைப்படும் இடங்களுக்கு வழங்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள 13,900 ஆழ்துளைக் கிணறுகளில் 6,900 கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. அரசு தண்ணீர் விநியோகம் செய்ய டேங்கர்களை ஏற்பாடு செய்துள்ளது,” என்று கூறினார்.

