கணவரின் கொடூரக் கொலையைக் கண்டவர் அதிர்ச்சியில் மரணம்

கணவரின் கொடூரக் கொலையைக் கண்டவர் அதிர்ச்சியில் மரணம்

2 mins read
482e5414-9801-4f65-bde1-93be216a77b9
மூர்த்தி ராவ் - ஷோபா தம்பதியர். - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூரில் தம் 59 வயது கணவரின் கொடூரக் கொலையை நேரில் கண்ட 56 வயது மாது, இதயத்துடிப்பு நின்று போனதால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இறந்தவர்கள் மூர்த்தி ராவ் கோகலே, ஷோபா கோகலே என அடையாளம் காணப்பட்டனர்.

அனந்தபூரில் ஜேஎன்டியு வளாகத்துக்கு எதிரே உள்ள எல்ஐசி காலனி குடியிருப்புக் கட்டடத்தில் கொலை நிகழ்ந்ததாகக் காவல்துறை அதிகாரி ரெட்டெப்பா தெரிவித்தார்.

அனந்த லெட்சுமி பொறியியல் கல்லூரி முதல்வராக திரு மூர்த்தி முன்பு இருந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆதித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், இறந்தவருடைய உடன்பிறப்பின் மகன்.

பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்துள்ள ஆதித்யா, பெயர்பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தர திரு மூர்த்தியிடம் குறிப்பிட்ட தொகையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய திரு மூர்த்தி, ஆதித்யாவின் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுத்தார்.

அதைத் தொடர்ந்து திரு மூர்த்திக்கு எதிராக பகைமையை ஏற்படுத்திக்கொண்ட ஆதித்யா, அவரைக் கொல்லத் திட்டம் தீட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு மூர்த்தியின் வீட்டிற்கு வந்த ஆதித்யா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாம் எடுத்து வந்த கத்தியைக் கொண்டு திரு மூர்த்தியை அவர் தாக்கினார்.

கத்தியால் திரு மூர்த்தி கழுத்தை அறுத்த ஆதித்யா, அவர் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே திரு மூர்த்தி உயிரிழந்தார்.

கணவரைக் காப்பாற்ற முயன்ற திருவாட்டி ஷோபாவும் தாக்கப்பட்டதில் காயமுற்றார். திரு மூர்த்தியின் கொடூரக் கொலையைக் கண்ட அவர், சில மணி நேரம் கழித்து இதயத்துடிப்பு நின்று போனதால் உயிரிழந்தார்.

இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அனந்தபூர் காவல்துறை, ஆதித்யாவை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இறந்தவர்களின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக அனந்தபூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

குறிப்புச் சொற்கள்