கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு வித்தியாசமான முறையில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
விவாகரத்து பெற்ற தம்பதியரில் கணவர் பாஜகவுக்கும் மனைவி திரிணாமூல் காங்கிரசுக்கு ஆதரவாகவும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
அதன்படி, பிஷ்ணுபூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக சுஜாதா மொண்டல் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், நாட்டை ஆளும் பாஜக ஏற்கெனவே வெளியிட்டுள்ள முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் சவுமித்ரா கான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுஜாதா மொண்டலின் முன்னாள் கணவர் ஆவார்.
பிஷ்ணுபூரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சவுமித்ரா கான், கடந்த 2019ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்தேர்தலில் சுஜாதா மொண்டல் தனது கணவருக்காகப் பிரசாரமும் செய்தார்.
அதன்பிறகு கடந்த 2021ல் சுஜாதா மொண்டல் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சவுமித்ரா கான் தனது மனைவியை விவகாரத்து செய்யப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், விவாகரத்தான இந்த முன்னாள் தம்பதியர், வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் மோத உள்ளதால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

