இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடப்பிற்கு வந்தது; பலதரப்பிலிருந்து எதிர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அது நடைமுறைக்கு வருவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.

‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

“குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ன் கீழ் இந்தியக் குடியுரிமை பெற தகுதியுள்ளவர்கள், அவ்விதிகளின்கீழ் விண்ணப்பிக்கலாம், இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்,” என்று மத்திய உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்குமுன் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையின மக்கள் இந்தியக் குடியுரிமை பெற குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2019 டிசம்பரில் அதிபரின் ஒப்புதலைப் பெற்றது.

ஆயினும், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. போராட்டங்களின்போதும் காவல்துறை நடவடிக்கையாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

‘தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சி’

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “விதிகளை அறிவிக்க ஒன்பது முறை கால நீட்டிப்பு பெற்ற மத்திய உள்துறை அமைச்சு, தற்போது பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவ்விதிகளை வெளியிட்டுள்ளது. இது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சி,” என்று சாடியுள்ளார்.

குறிப்பாக, மேற்கு வங்காளம், அசாம் மாநில வாக்காளர்களைக் குறிவைக்கும் முயற்சி இது என்றும் அவர் சுட்டியுள்ளார்.

முன்னதாக, “தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க அனுமதியோம்,” என்று 2024 ஜனவரி 31ஆம் தேதியே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

“மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், சமுதாயத்தை பிளவுபடுத்தும் சட்டமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வைகோ (மதிமுக), சீமான் (நாம் தமிழர்), கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்), பிரேமலதா (தேமுதிக), விஜய் (தமிழக வெற்றிக் கழகம்) உள்ளிட்ட தலைவர்களும் சிஏஏ சட்டம் நடப்பிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!