அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 புதிய வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
அத்துடன், ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியபோது, “நான் எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தில்தான் தொடங்கினேன். எனவே, முந்தைய காலத்தில் ரயில்வே துறை எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என எனக்குத் தெரியும்.
“நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவே வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுவே எங்களது முக்கிய குறிக்கோள்.
“சிலர் எங்களது முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக நினைக்கின்றனர். இதில் உண்மையில்லை,” என்றார்.
அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 10 வந்தே பாரத் ரயில்களையும் சேர்த்து இந்திய ரயில்வேயில் 51 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தலைநகர் டெல்லி 10 வந்தே பாரத் ரயில்களுடன் முதலிடத்திலும் மும்பை ஆறு வந்தே பாரத் ரயில்களுடன் இரண்டாவது இடத்திலும் சென்னை மாநகரம் ஐந்து வந்தே பாரத் ரயில்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

