புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய அரசு வரிசையாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) அறிக்கையை மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிஏஏ சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றன.
”பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்குவங்க அரசுகளும் மேலும் நாடு முழுதும் உள்ள நூற்றுக்கணக்கான அமைப்புகளும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
2019ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மார்ச் 11ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்துவ சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம்
புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து அசாம் மாநிலத்தில், ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ (ஏஏஎஸ்யூ) கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது.
இதனிடையே, சிஏஏ-வுக்கு எதிரான மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அசாம் காவல் துறை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.
சிஏஏ அமலுக்கு வருவதாக மத்திய அரசு திங்கட்கிழமை அறிவிப்பாணை வெளியிட்டதையடுத்து 30க்கு மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த ஆவணங்கள் எரிக்கப்பட்டன. இதுகுறித்து ஏஏஎஸ்யூ தலைமை ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா கூறுகையில், “அசாம் மக்களின் கலாசாரம், அடையாளம் மீது பாஜக அரசு பெரும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இச்சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் மனு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக இளையர் அமைப்பு (டிஒய்எஃப்ஐ) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. மனுவில் சிஏஏ, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மை கோட்பாட்டை மீறுவதாக விமர்சித்திருக்கிறது.
மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்கப்படும்போது, அது மக்களை கடுமையாக பாதிக்கிறது என்று கூறிய இளையர் அமைப்பு, இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21ஐ மீறுவதாகவும் தனது மனுவில் கூறியுள்ளது.
இதேபோல், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
மாநில அரசுகள் தடுக்க முடியாது
எனினும், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின்கீழ் வருவதால் இதில் மாநில அரசுகளின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் இதனை அமலாக்கவிடாமல் தடுக்கவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.