புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அவருடைய பணியிடம் நிரப்பப்படாத நிலையில், அருண் கோயல் பதவி விலகிவிட்டார். 2027ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவி விலகினார்.
இதையடுத்து புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலாளர், பணியாளர் நலத்துறைச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழு ஆறு பேர்களின் பெயர்களை பரிந்துரை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆறு பேரில் இரண்டு பேரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான குழு வியாழக்கிழமை (14.3.2024) கூடுகிறது. அந்தக் குழுவில் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரும் மக்களவைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் இடம்பெறுவர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு 2023 ஆகஸ்ட் மாதம்செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மிக்க குழுவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாற்றாக மத்திய மூத்த அமைச்சர் ஒருவர் இடம்பெறும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.
தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதியை ஒதுக்கி வைப்பதன்மூலம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை இந்தச் சட்டம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். புதிய சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.