பெங்களூரு: கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
எனினும் போதிய அளவில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிக அளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இதுவரை 12,000 லிட்டர் டேங்கர் லாரிக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் ரூ.1800 முதல் ரூ.2,000 வரை வசூலித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர் லாரிகள் மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.
“பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுபோல் அனுமதியின்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

