பெங்களூர்: பெங்களூரில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பெங்களூருவில் நாளுக்கு நாள் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
இங்குள்ள மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ள சூழலில், தனியார் டேங்கர் உரிமையாளர்கள் தண்ணீர் விலையை உயர்த்திவிட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
அங்குள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் அன்றாடத் தேவைகளுக்கு போதிய நீரின்றி அல்லாடி வருவதாகவும் புகார் கூறியுள்ளனர்.
இந்த தண்ணீர்த் தட்டுப்பாடு, அங்குள்ள தொழில் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. தென் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பீன்யா பகுதியில்16,000 சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.
பொறியியல் துறை சார்ந்த பணிகள், மருந்துகள் தயாரிப்பு, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், பேப்ரிகேஷன், எலக்ட்ரோ பிளேட்டிங், மின் மாற்றி உதிரிப் பாகங்கள் தயாரிப்பு என பல பொருள்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
தொழிற்சாலைகளில் செயல்படும் இயந்திரங்களைத் தொடர்ந்து குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர் அவசியம். ஆனால், 10 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காமல் தொழிற்சாலைகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிவிட்டதால் டேங்கர் நீரைப் பயன்படுத்தி தொழிற்சாலையை உரிமையாளர்கள் நடத்தும் சூழல் நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உற்பத்தி குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால் அரசு கருவூலத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பீன்யாவில் உள்ள தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் ஆரீப் கூறுகையில், “தண்ணீர்ப் பிரச்சினை நாளும் பெரும் தலைவலியாகி வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளும் வற்றுகின்றன. இதே நிலை நீடித்தால், தொழிற்சாலைகளை நடத்துவதே பெரும் சிரமமாகி விடும். உற்பத்தி நின்றுவிடும்.
“இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
“எங்களுக்கு காவிரி நீரைத் தாருங்கள் என நாங்கள் கேட்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரையாவது தாருங்கள் என்றுதான் அரசிடம் வேண்டுகிறோம்.
“ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை இன்னும் எப்படி மோசமாகும் என்று நினைத்தாலே பயமாக உள்ளது. டேங்கர் தண்ணீரும் கிடைக்காவிட்டால் தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழல் வரலாம்,” என்று கூறினார்.
இதனிடையே, அதிகரித்து வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றுவதை கட்டாயமாக்கும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், அரசு இதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
தண்ணீர்ப் பற்றாக்குறை மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை. நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்கு மட்டும் ஒருநாளில் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கார் கழுவுதல், தோட்டம், கட்டுமானம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மழைப்பற்றாக்குறை, ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்சினைக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

