தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

81 வயது எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டு; வழக்குப் பதிவு

2 mins read
4ed1aaac-2ba2-4ac7-a071-e6e541f4ea13
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் காவல்துறையினர் வியாழக்கிழமை இரவு எடியூரப்பா, 81, மீது வழக்குப் பதிவு செய்தனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுப்பது போக்சோ சட்டம் ஆகும்.

காவல்துறை தரப்பு தகவலின்படி 2024 பிப்ரவரி 2ஆம் தேதி சிறுமியும் அவரது தாயும் எடியூரப்பாவைச் சந்தித்தபோது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகத் தெரிகிறது.

அவர்கள் இருவரும் ஒரு மோசடி வழக்கில் உதவி நாடி எடியூரப்பாவைச் சந்திக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார்.

“மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது ஆதாரமற்றது. என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

“என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்,” என்றார் எடியூரப்பா.

கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், “பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“எடியூரப்பா மீதான பாலியல் புகாரில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்