புதுடெல்லி: அமலாக்கத் துறை எட்டு முறை அழைப்பாணை அனுப்பியும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையாகவில்லை.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை ஓயாமல் எட்டு முறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் தனக்கு அழைப்பாணை அனுப்பியது சட்டவிரோதம் என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தார்.
இதனால் அமலாக்கத் துறை நீதிமன்றத்தின் உதவியை நாடியது.
அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு முன்னிலையாக உத்தரவிடும்படி அது கேட்டுக்கொண்டது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை அன்று முன்னிலையானார். அப்போது 8வது முறையாக அமலாக்கத்துறை அழைப்பாணையை நிராகரித்ததற்காக தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பிணை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெள்ளிக் கிழமை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களான மணிஷ் சிசோடியா (துணைமுதல்வர்), மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை.

