தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபானக் கொள்கை வழக்கு: முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்மகள் கவிதா கைது

2 mins read
3b73a6ca-4b18-4e75-8e97-cc2069328cba
கைது செய்யப்பட்ட கவிதா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர், தெலுங்கானா மாநிலத்தின் மேலவை உறுப்பினராக உள்ளார்.

டெல்லியிலிருந்து வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பத்துப் பேர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு வெள்ளிக் கிழமை (மார்ச் 15) வந்தனர்.

கவிதா மற்றும் அவரது கணவர் அனில் உட்பட வீட்டில் இருந்த அனைவரது கைப்பேசிகளையும் கைப்பற்றி நான்கு மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதா மூலமாக ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கைதாணையைக் காட்டிய அமலாக்கத் துறையினர் அவரை மாலை 6.20 மணி அளவில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதே நாள் இரவு 8.40 மணிக்கு விமானத்தில் கவிதாவை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அவர் சனிக்கிழமை காலை முன்னிலைப்படுப்பட்டார்.

“சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை கவிதா இழைத்திருக்கிறார்,” என கைது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, இது ஒரு சட்டவிரோத கைது என குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டில் கவிதாவிடம் அமலாக்கத்துறை 3 முறை விசாரணை நடத்தி அவரது பதில்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தது.

குறிப்புச் சொற்கள்