இந்தியா: ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டத் தேர்தல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று (மார்ச் 16) தெரிவித்தது.

இந்தத் தேர்தல் ஏழு கட்டங்களாக, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவுறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு இடம்பெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று புதுடெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

‘ஜனநாயகத் திருவிழா’ என அழைக்கப்படும் உலகின் ஆகப் பெரிய தேர்தலான இதில் கிட்டத்தட்ட 970 மில்லியன் பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். 

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் ஏறத்தாழ 497 மில்லியன் பேர்; பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 471 மில்லியன் பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் கிட்டத்தட்ட 218,000 பேர். இம்முறை முதன்முறையாக 18.2 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இந்நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே வாக்களிக்கலாம் என்ற திரு ராஜீவ் குமார், உடற்குறையுள்ளோரில் 40 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 மில்லியன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன; 1.05 மில்லியன் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

“தேர்தல் வன்முறைகளைத் தடுக்க ஆளில்லா வானூர்தி மூலம் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படும். நாடு முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்” வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செயலி மூலமாகத் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு ராஜீவ் குமார் கூறினார்.

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல்

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் அதே நாளிலேயே தேர்தல் நடத்தப்படும்.

வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28 இடம்பெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 30 என்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதியன்றே தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வாகை சூடும் எண்ணத்துடன் களமிறங்குகிறது. அதனை எதிர்த்து, 22 கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணியும் வேறு சில மாநிலக் கட்சிகளும் களம் காண்கின்றன.

நடப்பு 17ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!