தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு

2 mins read
dd9e0ee8-5791-431e-8fc7-75f55a1acbe7
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த எம்.வி.ரூயென் சரக்குக் கப்பலின் மேல் பகுதியில் ஊழியர்கள் உள்ளனர். இந்தியக் கடற்படை ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடுகிறது.   - படம்: இந்தியக் கடற்படை

புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் பயணம் செய்த எம்.வி.ரூயென் சரக்குக் கப்பலை கடத்திச்சென்ற 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களைக் கைது செய்தது இந்தியக் கடற்படை. அத்துடன் அவர்கள் வசமிருந்த சரக்குக் கப்பலும் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 100 நாள்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கப்பல் மாலுமிகள் உள்பட 17 பணியாளர்களும் இந்தியக் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை தங்களது கடத்தல் முயற்சிகளுக்கு கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இந்தியக் கடற்கரையிலிருந்து 2,800 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலை மீட்கும் முயற்சியில் இந்தியக் கடற்படை அதிகாரிகள் இறங்கினர்.

கடல் சுற்றுக்காவல் விமானமான ஐஎன்எஸ் கோல்கத்தா, ஐஎன்எஸ் சுபத்ரா, சி-17 விமானம், ஹெலிகாப்டர்கள் அனைத்தும் சரக்குக் கப்பல் இருக்கும் இடமருகே கொண்டு செல்லப்பட்டு கடற்கொள்ளையர்களுக்கு இந்தியக் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியக் கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்களும் கைதாகினர்.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், “கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கோல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 17 ஊழியர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன,” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இந்திய கடற்படையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்