புதுடெல்லி: பிரபல நன்கொடையாளரும் எழுத்தாளரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தியை, 73, நாடாளுமன்ற உறுப்பினராக அதிபர் திரௌபதி முர்மு நியமித்தார். அனைத்துலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8) வெளியான அவரது இந்த அறிவிப்பு பரவலான பாராட்டுகளுடன் வரவேற்கப்பட்டது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கும் என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியரின் மருமகன் ரிஷி சுனக், 2022ஆம் ஆண்டில் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராகப் பணியாற்றுகிறார்.
சுதா மூர்த்தியின் எம்பி நியமனம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சமூக சேவை, நன்கொடை அளிப்பது, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய பங்களிப்பையும் பலருக்கும் ஊக்கத்தையும் அளித்து வருபவர் சுதா மூர்த்தி. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது பெண் சக்திக்கு ஓர் உதாரணம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா மூர்த்தி, “ஏழைகளின் நலனுக்காக என்னால் என்ன முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். நான் என்னை அரசியல்வாதியாக கருதுவதில்லை. ஏனெனில், நான் அரசியல்வாதி அல்ல.
“நான் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். எனது மருமகனின் (ரிஷி சுனக்) அரசியல் அவரது நாட்டுக்கானது. அது வேறு. எனது பணி வேறு. தற்போது நான் அரசுப் பணியாளர்,” எனத் தெரிவித்தார்.
2006ல் பத்மஸ்ரீ விருதினையும் 2023ல் பத்மபூஷண் விருதினையும் பெற்ற சுதா மூர்த்தி, ஆங்கிலம், கன்னட இலக்கியங்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்திருப்பவர்.
1996ல் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்த சுதா மூர்த்தி, கடந்த 2021ல் அதிலிருந்து ஓய்வு பெற்றார்.

