இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஐவர் கைது

2 mins read
d168a0d1-5ef9-43a7-8a7a-35361bb64fa5
மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஐவரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளனர். - படம்: குஜராத் பல்கலைக்கழகம்

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் மார்ச் 16ஆம் தேதியன்று தாக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அம்மாநில காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.

அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்திய நேரப்படி சுமார் 10 மணி அளவில் குறைந்தது 15 வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் அறையில் தொழுதுகொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்தும்படி வெளிநாட்டு மாணவர்களிடம் குறைந்தது மூன்று பேர் கூறியதாக அறியப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கிருந்து கிளம்பிச் சென்ற ஆடவர்கள் ஒரு கும்பலுடன் விடுதிக்குத் திரும்பினர்.

இரும்புக் குழாய்கள், கற்கள், கத்திகள் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு விடுதி அறைக்குள் நுழைந்த அந்தக் கும்பல் வெளிநாட்டு மாணவர்களைத் தாக்கியதாகவும் விடுதியையும் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களில் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தங்கள் மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றை உடைத்தது மட்டுமல்லாது, விடு்திக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குறைந்தது ஐந்து வெளிநாட்டு மாணவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூவர் மருத்துவமனையிலிருந்து விடுதி திரும்பிவிட்டனர்.

இதற்கிடையே, தாக்குதல் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் கைது செய்யப்படுவர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கட்சி அல்லது சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து காவல்துறை தகவல் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்