பாலக்காடு: மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை வாகனப் பேரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழகத்தின் கோயம்புத்தூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் பாலக்காட்டுக்குச் சென்றார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி நின்றபடி கோட்டமைந்தன் அஞ்சுவிளக்கிலிருந்து தொடங்கி, நகரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் நோக்கி பேரணி சென்றது.
பேரணி நடைபெறும் வழிநெடுகிலும் இருபுறமும் பூக்கள், மாலைகள், கட்சிக் கொடிகள், மோடியின் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் , பாஜக ஆதரவாளர்கள் அணிவகுத்து நின்றனர்.
வாகனப் பேரணியில் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழங்கி மோடியை வரவேற்றனர்.
மூன்று மாதங்களுக்குள் பிரதமர் மோடி கேரள மாநிலத்திற்கு வருவது இது ஐந்தாவது முறையாகும்.
பின்னர், கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் சென்று சேர்ந்த மோடி, கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு சென்றார்.
சேலத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

