திரிணாமூல் காங்கிரஸ்: நன்கொடை அளித்தவர் யார் எனத் தெரியாது

திரிணாமூல் காங்கிரஸ்: நன்கொடை அளித்தவர் யார் எனத் தெரியாது

2 mins read
f2b8edb9-21a5-427b-ab1c-ae735c11f5d8
எங்கள் கட்சிக்குத் தேர்தல் பத்திரங்களை அளித்த நன்கொடையாளர்கள் பற்றிய விவரம் ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளது திரிணாமூல் காங்கிரஸ். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை வழங்கிய நன்கொடையாளர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியாது என்று திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பத்திரங்களின் வரிசை எண்,வாங்கியவர்கள் யார், அவற்றை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களையும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி கட்சிகள் அளித்த அந்த விவரங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியை நன்கொடையாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்தக் கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை வழங்கினர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் பத்திர விவரங்களைச் சமர்ப்பித்தபோது தன்னிலை விளக்கமும் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மேற்குவங்கத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தின் தபால் பெட்டியில் சீலிட்ட உறைகள் போடப்பட்டிருந்தன. அந்த உறைகளை திறந்து பார்த்தபோது தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அவற்றை யார் வாங்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

கோல்கத்தாவில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தின் தபால் பெட்டியில் சீலிட்ட உறைகள் போடப்பட்டிருந்தன. அந்த உறைகளை திறந்து பார்த்தபோது தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அவற்றை யார் வாங்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே முழு விவரங்கள் தெரியும். ஏனெனில், தேர்தல் பத்திரங்களை வாங்கும்போது பான் எண், அடையாளச் சான்று, முகவரிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை நன்கொடையாளர்கள் வழங்கியிருப்பார்கள். எனவே எங்களுக்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் என்ற விவரம் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே தெரியும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்

பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.24.4 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்சிக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான தேர்தல் பத்திரங்கள் கோல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. சில தேர்தல் பத்திரங்கள் மட்டுமே பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் தேர்தல் ஆணையத்திடம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பாட்னாவில் உள்ள எங்களது கட்சி அலுவலகத்துக்கு சிலர் வந்தனர். அவர்கள் சீலிட்ட உறையை வழங்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அந்த உறையைத் திறந்து பார்த்தபோது ரூ.10 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அவற்றை வழங்கிய நன்கொடையாளர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்