தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல்; நாடு முழுவதும்வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

2 mins read
7b7dbba9-d8ed-400c-8f6f-b835b947dc8f
முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்த நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான 102 தொகுதிகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் புதன்கிழமை (மார்ச் 20) தொடங்கியுள்ளது.

இந்த 102 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் உள்ளடங்கியிருக்கின்றன.

மேலும் 17 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியிருக்கிறது.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீது மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேட்பு மனுத் தாக்கலின் போது விதிமுறைகளை பின்பற்றும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.

வேட்பாளர்கள், மனுத்தாக்கல் செய்ய வரும் முழுநேரமும் காணொளிப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் நேரடியாக அல்லது முன்மொழிபவர் வழியாக வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுவை இணையம் வழியாகப் பூர்த்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் சமர்ப்பிக்க முடியாது. அதை அச்சிட்டு நேரடியாக வழங்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதும் சுயேச்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் முன்மொழிய வேண்டும்.

அதேபோல் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள், வழக்கு விவரம் போன்றவற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

ஏழு கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்