கெஜ்ரிவால் மனைவி டெல்லி முதல்வர் ஆகக்கூடும்

கெஜ்ரிவால் மனைவி டெல்லி முதல்வர் ஆகக்கூடும்

2 mins read
0947219f-2e52-4b33-98a3-2851a9747587
ஐஆர்எஸ் அதிகாரியாக 22 ஆண்டு காலம் பணியாற்றியவர் சுனிதா கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்ற ஊகத் தகவல் உலவுகிறது.

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வியாழக்கிழமை இரவு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கைதானாலும் கெஜ்ரிவால் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கூறினர்.

அதேநேரம், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், அமைச்சர்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

மார்ச் 28ஆம் தேதி வரை ஆறு நாள் விசாரணைக் காவலில் கெஜ்ரிவாலை வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆறு நாள்களுக்குப் பிறகு பிணை வழங்கப்படாமல் மீண்டும் அவரது காவல் நீட்டிக்கப்பட்டால், டெல்லி அரசு சீராகச் செயல்பட புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் உருவாகலாம்.

அப்படிப்பட்ட சூழலில் சுனிதா கெஜ்ரிவாலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டபோது அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வர் பொறுப்பேற்றார்.

அண்மையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டபோது அவரது மனைவி கல்பனா சோரன் புதிய முதல்வர் ஆவார் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில், டெல்லிக்கு புதிய முதல்வர் தேர்ந்து எடுக்கப்பட்டால் அது சுனிதாவாகத்தான் இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர்.

சுனிதா ஐஆர்எஸ் எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரியாக 22 ஆண்டு காலம் பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வு பெற்றவர். அந்த அனுபவம் முதல்வராக நிர்வாகம் செய்ய அவருக்குப் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்