‘இது வித்தை அல்ல, முட்டாள்தனம்’: சேலையில் சாகசம் புரிந்த பெண்ணை இணையவாசிகள் சாடல்

1 mins read
e052a946-8be4-4270-9796-196badcb49fb
இரும்புக் கம்பத்தைச் சுற்றிவந்தபோது பெண்ணின் சேலை தீப்பற்றிக்கொண்டது. - படங்கள்: இணையம்

மும்பை: பெண் ஒருவர் ஆபத்தான வித்தையைச் செய்துகாட்டியபோது அவரின் சேலை தீப்பற்றிக்கொள்ளும் காணொளி, இணையவாசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஹோலி பண்டிகை தொடர்பாக இணையத்தில் பலரும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், கவனத்தை ஈர்ப்பதாக நினைத்துத் தங்களுக்கே அபாய நிலையை உருவாக்கிக் கொள்கின்றனர்.

View post on Instagram
 

அவ்வாறு காணொளி தொடங்கும்போது, தனது காலணிகளில் ஹோலி பட்டாசுகளைக் கட்டியிருந்த பெண், இரும்புக் கம்பத்தில் தயாராக இருந்தார்.

அருகில் இருந்தவர் அந்தப் பட்டாசுகளைப் பற்றவைத்ததும் 360 டிகிரி குட்டிகரணம் போட்டார்.

ஆனால், அதன் பிறகு அவரின் சேலை தீப்பற்றிக்கொண்டது.

இதனால், கம்பத்திலிருந்து அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டார்.

பட்டாசுகள் மேலும் சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகச் சுற்றியிருந்தோர் அவற்றை மிதித்து நெருப்பை அணைத்தனர்.

இதையடுத்து, காணொளியைக் கண்டவர்கள் மத்தியில் பெண்ணின் செயல் குறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

பாதுகாப்பு இல்லை என்றும் முட்டாள்தனம் என்றும் பலரும் சாடி வருகின்றனர்.

“ஒரு காணொளிக்காக இந்த அபாயகரமான செயல்,” என்றார் ஒருவர்.

வண்ணங்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, மார்ச் 25 தொடங்கவுள்ளது. இந்நிலையில், இத்தகைய வித்தைகளை மக்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆபத்தான செயல்களைக் காட்டும் காணொளிகளைத் தயாரிப்பதற்குப் பதிலாகப் பண்டிகையின் உண்மை அர்த்தத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்