புதுடெல்லி: ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 10 மடங்குக்கும் அதிகமாக வீட்டு வேலைகளைச் செய்வது தெரிய வந்திருப்பதாக புதிய ஆய்வுத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது குறித்து மும்பையில் உள்ள அனைத்துலக மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் (ஐஐபிஎஸ்), டாடா இன்ஸ்டிடியூட் சோசியல் சையின்ஸ் (டிஐஎஸ்எஸ்) ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின.
இதில், வீட்டு வேலைகளுக்காக ஆண்கள் 98 நிமிடங்களையும் பெண்கள் 301 நிமிடங்களையும் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் உலகின் மற்ற பகுதிகளில் வசிக்கும் பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பெண்கள் ஊதியமில்லா வீட்டு வேலைகளிலும் பராமரிப்பிலும் ஆண்களை விடவும் 10 மடங்கு அதிகமாக ஈடுபடுகின்றனர்.
எனினும், படித்த பெண்கள் பணிச்சுமை மேலாண்மையில் சிறந்து விளங்குவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.
உலக அளவில் பெண்கள் ஆண்களை விடவும் 3 மடங்கு நேரத்தை வீட்டு, பராமரிப்புப் பணிகளில் அதிகம் செலவிடுவதாகவும் ஆனால், இந்தியாவில் ஆண்களை விடவும் பெண்கள் 10 மடங்கு நேரத்தைச் செலவிடுவதாகவும் குடும்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பிலான இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு விவரம் தெரிவித்துள்ளது.
பெரிய குடும்பங்களில் வாழும் பெண்களைவிடவும் (நாள் ஒன்றுக்கு 303 நிமிடங்கள்) நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் (ஒரு நாளைக்கு 320 நிமிடங்கள்) செலவிடுவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை விட (ஒரு நாளைக்கு 304 நிமிடங்கள்) ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் (ஒரு நாளில் 317 நிமிடங்கள்) அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
அதிக வசதி படைத்தவர்கள் வீட்டு வேலைக்குப் பணியாளர்களை பணி அமர்த்திக் கொள்வதன் காரணமாக வீட்டு வேலைக்கு தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதாகவும் ஆய்வு விவரம் தெரிவித்துள்ளது.

