ஜேஎன்யு: மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி

ஜேஎன்யு: மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி

2 mins read
7d8950c3-f0a7-4a42-8694-3393a1e355ed
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி ஆதரவு அமைப்பு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதை மாணவர்கள் பாட்டுப்பாடி கொண்டாடுகின்றனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை.

ஜேஎன்யு பல்கலை., மாணவர் பேரவைத் தலைவராக தனஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த, 1996 - 97 ஆம் ஆண்டில் பட்டி லால் பாயிர்வா ஜேஎன்யுவின் முதல் பட்டியலின மாணவர் பேரவைத் தலைவராகி வரலாறு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பட்டியலினத் தலைவர் மாணவர் பேரவைக்குக் கிட்டியுள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் பெரும்பாலான பதவிகளுக்கான இடங்களிலும் இடதுசாரி குழு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில், தனஞ்சய் 2,598 வாக்குகளுடன் வெற்றி பெற்று மாணவர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபி ஆதரவு பெற்ற உமேஷ் சந்திரா ஆஜ்மீரா 1,676 வாக்குகளைப் பெற்றார்.

ஒரே ஒரு பதவிக்கான போட்டியில் மட்டும் ‘அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கத்தின்’ வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனஞ்சய், “இந்தத் தேர்தல் முடிவு மாணவர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர், மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஜேஎன்யு வளாகத்தை எவ்விதப் பாகுபாடும் அற்ற, அனைவரையும் உள்ளடக்கிய வளாகமாக மாற்ற பாடுபடுவேன்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்