தேர்தல் பத்திர நன்கொடை: பெயர்களை வெளியிடாதது குறித்து நிதின் கட்காரி விளக்கம்

தேர்தல் பத்திர நன்கொடை: பெயர்களை வெளியிடாதது குறித்து நிதின் கட்காரி விளக்கம்

1 mins read
9b8419e6-18f5-4148-8ab0-de2a97f29f32
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி. - கோப்புப்படம்: ஊடகம்

காந்தி நகர்: பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் அடையாளங்களை வெளியிடாதது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

“குஜராத்தின் காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கட்காரி, “எந்த கட்சியும் நன்கொடைஇல்லாமல் இயங்க முடியாது. சில நாடுகளில், அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதியை வழங்கி வருகிறது. இந்தியாவில் அதுபோன்ற நடைமுறை இல்லை. இதனால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கிடைக்க தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

“அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நன்கொடை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தல் பத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்சி மாறினால் பணம் கொடுத்தவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நன்கொடையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை.”

“தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கினால் அதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.

“அரசியல் கட்சிகள் நிதியின்றி தேர்தலில் போட்டியிடுவது என்பது கடினம். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நன்கொடை பெறப் பயன்படுத்தப்படும் தேர்தல் பத்திர முறையில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து சரிசெய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டால், அனைத்துக் கட்சியினரும் அதுகுறித்து ஒரு மனதாக விவாதித்து முடிவெடுக்கலாம் என்று அமைச்சர் கட்காரி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்