புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற எதிர்க்கட்சி ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.
மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கெஜ்ரிவால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
அமலாக்கத் துறையின் பிடியில் மார்ச் 28ஆம் தேதி வரை அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் மூளையாகச் செயல்பட்டவர் என்று கூறிய அமலாக்கத் துறையின் வழக்கறிஞர், இது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டி உள்ளது என்றார்.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆனால், அந்த வழக்கு வேண்டுமென்றே பொய்யாகப் புனையப்பட்டது என்றும் கெஜ்ரிவால் தவறுதலாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆம் ஆத்மி கூறி வருகிறது.
ஆயினும், இந்தச் சம்பவத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று மத்திய அரசாங்கமும் பிரதமர் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சியும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் நோக்கிப் படையெடுத்துச் செல்ல கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் முயன்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆதரவாளர்கள் பலர் தரையில் அமர்ந்து கண்டன முழக்கம் எழுப்புவதையும் அவர்களை காவல்துறையினர் பேருந்துகளில் ஏற்றுவதையும் தொலைக்காட்சிகள் காட்டின.
அதேவேளை, கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகக் கோரி பாஜக ஆதரவாளர்கள் டெல்லித் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டபோது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களில் ஒருசிலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டனர்.
“கெஜ்ரிவால் ஊழல்வாதி, நேர்மையற்றவர். உடனே அவர் பதவி விலக வேண்டும்,” என்று ஏஎன்ஐ செய்தியிடம் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார்.
ஆனால், கெஜ்ரிவால் விலக மாட்டார் என்றும் அவரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் போராட்டம் தொடரும் என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள், மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டு உள்ளது.

