கவிதாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

கவிதாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

2 mins read
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு
14e043f2-937c-4d4b-811c-7c48ceb643a4
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 26) அவருடைய நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை கோரிக்கையின்படி மேலும் 14 நாட்கள் (ஏப்ரல் 9 ஆம் தேதி வரை) கவிதாவை காவலில் வைத்து விசாரிப்பதற்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேட்டில் கவிதாவுக்கும் சம்பந்தம் உள்ளதாகக் கூறி கவிதா மீது வழக்குப் பதிந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகும்படி கவிதாவுக்கு அமலாக்கத்துறை பலமுறை அழைப்பாணை அனுப்பி வந்தது.

ஆனால், ஓரிரு முறை மட்டுமே முன்னிலையான கவிதா, பலமுறை அழைப்பாணைகளை நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 5 மணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவைக் கைது செய்தனர்.

ஏற்கெனவே இந்த வழக்குத் தொடர்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கவிதாவின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கவிதா இடைக்கால பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்வெழுதவுள்ள தனது மகனை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், அதனை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்