வயநாடு தொகுதியில் மூன்று முக்கியத் தலைவர்கள் போட்டி

வயநாடு தொகுதியில் மூன்று முக்கியத் தலைவர்கள் போட்டி

2 mins read
3d8a73d4-f406-45c2-99f0-ca034b1a327b
ராகுல்காந்தி, ஆனி ராஜா, சுரேந்திரன். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின், வயநாடு தொகுதியில் மூன்று முக்கியத் தலைவர்கள் களம் இறங்கி உள்ளதால் முக்கிய வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ளது.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் களமிறங்க உள்ளார். கடந்த முறை அமேதி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், அமேதியில் தோல்வியடைந்தார். அதேசமயத்தில் வயநாட்டில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தற்போதே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனி ராஜா களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கெனவே தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இத்தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்ட நிலையில் திடீரென இப்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வயநாட்டில் ராகுலை வீழ்த்த வலுவான வேட்பாளரைக் களமிறக்குவதற்கு கட்சி திட்டமிட்டு இருந்தபடி என்னை போட்டியிடும்படி வலியுறுத்தினர். அதனை சவாலாக எடுத்துக்கொண்டு களம் இறங்குகிறேன்.

“கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு என்ன முடிவு கிடைத்ததோ, அதுதான் இந்தத் தேர்தலிலும் வயநாட்டில் கிடைக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்