தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையின்மை பிரச்சினை: சர்ச்சையை ஏற்படுத்திய பொருளாதார ஆலோசகர் கருத்து

3 mins read
741db9cb-32d4-48bc-aeaa-ad38ac60cdf6
இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் - படம்: இணையம்

வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய “இந்திய வேலைவாய்ப்பு 2024” ஆய்வு அறிக்கையை ஆனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அனைத்துலக ஊழியர் அமைப்பும் (ILO) மனிதவள மேம்பாட்டு நிறுவனமும் (IHD) இணைந்து ”இந்தியாவின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை 2024”ஐ வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் அதிகமான இளையர்கள் வேலையின்றி இருப்பதாகவும், படிப்புக்கேற்ற வேலைகள் கிடைக்காமல் வேறு வேலைகளில் இளையர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலையின்றி சிரமப்படுவோரில் 83 விழுக்காட்டினர் இளைஞர்கள். 2000ஆம் ஆண்டில் 35.2 விழுக்காடாக இருந்த பள்ளிக் கல்வியை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை, 2022ல் 65.7% ஆக அதிகரித்துள்ளது.

2000 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காமல் வேறு வேலையில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் அதிகரித்திருக்கிறது.

விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சி என்பது ஒரு பெரிய சவாலாகவே காணப்படுகிறது. மற்ற துறைகளின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும் அவற்றில் போதிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறியது.

வேலைக்கு தகுந்த வரிச் சலுகைகள், சமூகப் பாதுகாப்பு, விடுப்பு சலுகைகள், பணி நீக்கத்திற்கு முன்பு முறையான அறிவிப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்றவை கிடைப்பதில்லை. மக்கள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலைப் பளுவுடன் நெருக்கடியான நிலையில் தான் பணியாற்றுகின்றனர். இதுதவிர இந்திய இளைஞர்கள் போதிய அளவில் திறன்களை வளர்த்துக் கொள்வதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.

குறிப்பாக மின்னிலக்க தொழில்நுட்ப அறிவை பெறுவதில் பின்னடைவை சந்திக்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.

“வேலைவாய்ப்புக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகம் அல்லது பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளில் அரசு தலையீடு இருக்கிறது நினைப்பது தவறு. அந்த மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்,” என்று இது குறித்து பேசிய திரு ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.

“வேலையின்மை பிரச்சினையை மத்திய அரசால் மட்டுமே முழுமையாக சரி செய்ய முடியாது. நாட்டில் லாபம் ஈட்டக்கூடிய கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

“இந்தியாவில் தொழிலாளர்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது.

“கடந்த 2005 முதல் 2022 வரை வேலைவாய்ப்பு கணக்கீடுகளை ஒப்பிட்டால், வேலை வாய்ப்பு வழங்கும் விழுக்காடு சீராக உயர்ந்து வருகின்றது. கொரோனாவுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், வேலையின்மை பிரச்சினை உள்ளது.” என அவர் தெரிவித்தார்.

நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சினையை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வேலைவாய்ப்பு குறித்து அவர் பேசிய கருத்துகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதி விவகாரத்தில் பாஜக மக்களைத் தவறாக வழிநடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“அரசால் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற வாக்குமூலத்தை பொருளாதார ஆலோசகர் வழங்கியுள்ளார். இதுதான் பாஜக அரசின் கருத்தாகவும் இருக்கும் பட்சத்தில், இடத்தை காலி செய்யுங்கள் என்று அவர்களிடம் நாம் தைரியமாக சொல்ல வேண்டும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள காங்கிரசிடம் திட்டங்கள் உள்ளன” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு மத்தியில் பொருளியல் ஆலோசகரின் கருத்து அரசியல் அரங்கில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்