பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் மாண்டியாதொகுதியின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான சுமலதாவுக்கு மீண்டும் அந்தத் தொகுதியை ஒதுக்க பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த அவர், அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடலாமா என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், மாண்டியாமக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒரு முறை மஜத சார்பிலும், 2 முறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்பியாக தேர்வானார். அவரது மறைவுக்குப் பிறகு மனைவி சுமலதா காங்கிரஸ் சார்பில் மண்டியாவில் களமிறங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்குத் தொகுதி ஒதுக்கவில்லை. அதனால், அந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து பாஜக மேலிடம் சுமலதாவிடம் தங்களது கட்சியில் இணையுமாறு வலியுறுத்தியது. ஆனால் அவர் பாஜகவில் சேராமல், தொடர்ந்து அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மாண்டியாதொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவதாக கூறினார். அதனை பரிசீலிப்பதாக அவர் கூறியதால், சுமலதாவும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.
ஆனால் பாஜக மேலிடம் மாண்டியாதொகுதியை தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி அல்லது அவரது மகன் நிகில் கவுடா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

