தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீட்டிப்பு; கட்சியை முடக்கத் திட்டம் என கெஜ்ரிவால் சாடல்

2 mins read
8357155b-c13e-4789-8cea-da84f8588b94
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி முன்னிலையானபோது ஊடகத்தினரைச் சந்தித்தார்.

அப்போது, தனது கைது அரசியல் சதி என்றும் ஆம் ஆத்மி கட்சியை முடக்கப் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் ஆலோசித்து வருவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கெஜ்ரிவால் “இது மிகப்பெரிய சதிச் செயல், இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” என்றார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சரிடம் ஆறுநாட்கள் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

நீதிமன்றம் அளித்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை முன்வைத்தனர். அதில் மின்னிலக்க லாக்கர்களின் மறைச்சொற்களை (பாஸ்வேர்டு) கெஜ்ரிவால் தர மறுப்பதாக கூறப்பட்டது. விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினர்.

மறைச்சொற்களை ஊடுருவ நேரிடும் என்றும் ஏழு நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யக் கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிடவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக ஒன்பது முறை அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியும் முன்னிலையாகததால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 28ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளது.

கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிக்க எந்த சட்டத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருப்பதால் ஆட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாக சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்