மூன்றாவது முறையாக அழைப்பாணையை நிராகரித்த மஹுவா மொய்த்ரா

மூன்றாவது முறையாக அழைப்பாணையை நிராகரித்த மஹுவா மொய்த்ரா

1 mins read
048fa7da-0592-4154-8127-f3275b1a8916
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு வியாழக்கிழமை (மார்ச் 28) வருமாறு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நிராகரித்துள்ளார்.

தான் போட்டியிடும் கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “கிருஷ்ணாநகர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக இன்று மதியம் செல்ல உள்ளேன்,” என்றார்.

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மஹுவா மொய்த்ராவுக்கு இரண்டு முறை அழைப்பாணை அனுப்பி இருந்தது. அந்த இரண்டையும் அவர் நிராகரித்திருந்தார்.

மஹுவாவிடம், என்ஆர்ஐ வங்கிக் கணக்கு மற்றும் வெளிநாட்டில் இருந்து பெற்ற ரொக்கப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.

இதனிடையே தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மஹுவா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்