முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரி சிறையில் மரணம்: உ.பி.யில் பாதுகாப்பு அதிகரிப்பு

முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரி சிறையில் மரணம்: உ.பி.யில் பாதுகாப்பு அதிகரிப்பு

2 mins read
94f1f0c2-997a-4599-9d4d-29f6f7f7e952
தாதா முக்தார் அன்சாரி. - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பாண்டா சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி, 63, திடீர் நெஞ்சு வலி காரணமாக வியாழக்கிழமை இரவு (மார்ச் 28) காலமானார்.

மவூ தொகுதியின் எம்எல்ஏவாகப் பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மெல்லக் கொல்லும் விசம் (Slow Poison) கொடுக்கப்பட்டதாலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். எனினும், முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக மூவர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவலர்களின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரிய கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முக்தார் அன்சாரியின் கோட்டையான மவூ, காஜிபூர், வாரணாசி, ஜான்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

உ.பி.யில் பிரபல தாதாவாக வளர்ந்து, அரசியல்வாதியாக மாறியவர் முக்தார் அன்சாரி. முன்னாள் எம்எல்ஏவான இவர், அங்குள்ள மௌசதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றிபெற்றவர். அவர் மீது 60க்கும் மேற்பட்ட பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இவர் மீதான வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்தபோது விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

முன்னதாக, சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டி இருந்தார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், அவர் திடீரென உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்