ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் இருந்து 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு டாக்சி ஒன்று ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அருகில் இருந்த 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
காவலர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கனமழைக்கு மத்தியில் 10 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காஷ்மீரின் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது நள்ளிரவு 1 மணி அளவில் டாக்சி விபத்தில் சிக்கியது.
உயிரிழந்தவர்களில் ஜம்முவில் உள்ள அம்ப் க்ரோதாவைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் பல்வான் சிங் (47), பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனைச் சேர்ந்த விபின் முகியா பைராகாங் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சரும் உதய்பூர் எம்.பி.யுமான ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளப் பதிவில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இதே ராம்பன் பகுதியில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

