தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகரிப்பு: ஆய்வறிக்கை

2 mins read
43b5ccdd-d0e9-40be-9dbc-b504c8a63e5b
2024 பிப்ரவரி 26ஆம் தேதி பெங்களூரு அரண்மனைத் திடலில் இடம்பெற்ற வேலைச் சந்தையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்றோர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய இளையர்களில் பள்ளிக்கே செல்லாதவர்களைவிட அதிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எழுத அல்லது படிக்கத் தெரியாத இளையர்களில் 3.4 விழுக்காட்டினர் வேலையின்றி உள்ளனர். அதே நேரத்தில், பட்டதாரி இளையர்களில் 29.1 விழுக்காட்டினர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்று ஐஎல்ஓ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உயர்நிலைப் பள்ளி அல்லது மேற்கல்வி பயிலாத இளம் இந்தியர்களுக்கான வேலையின்மை விகிதம் 18.4 விழுக்காடாக உள்ளது.

“இந்தியாவில் வேலையின்மை என்பது இளையரிடையே ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி அல்லது உயர்கல்வி பயின்ற இளையர்களிடத்தில் அது அதிகம். ஆண்டுகள் செல்ல செல்ல அது தீவிரமாகிவிட்டது,” என்று அவ்வறிக்கை கூறியுள்ளது.

அத்துடன், இந்தியாவில் இளையர் வேலையின்மை விகிதம் தற்போது உலக நாடுகளைவிட அதிகமாக உள்ளது என்றும் அது சுட்டியுள்ளது.

அதே நேரத்தில், கடந்த 2000ஆவது ஆண்டை ஒப்புநோக்க, 15 முதல் 29 வயது வரையிலான வேலையில்லா இளையர்களின் விகிதம் 88.6 விழுக்காட்டில் இருந்து 82.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

ஆயினும், இதே காலகட்டத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் விகிதம் 54.2 விழுக்காட்டிலிருந்து 65.7 விழுக்காடாகக் கூடிவிட்டது. அதிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டதாரி இளையர்களைப் பொறுத்தமட்டில், பெண்களில் 76.7 விழுக்காட்டினரும் ஆண்களில் 62.2 விழுக்காட்டினரும் வேலையின்றி உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், கிராமப்புறங்களைவிட நகர்ப்பகுதிகளில்தான் வேலையின்மை அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

உலகளவில் பார்க்கும்போது இந்தியாவில்தான் மிகக் குறைந்த அளவிலேயே ஊழியரணியில் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட 25% பெண்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் இவ்விகிதம் கூடியது.

தற்காலிக மற்றும் குறைந்த ஊதிய வேலைகள் அதிகரித்து வருவது குறித்தும் ஐஎல்ஓ ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இதனிடையே, இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் சீனாவில் 16-24 வயதிற்குட்பட்ட இளையர்களுக்கான வேலையின்மை விகிதம் 15.3 விழுக்காடாக இருந்தது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்