தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுலை எதிர்த்துப் போட்டியிடும் கேரளா பாஜக தலைவருக்கு எதிராக 242 வழக்குகள்

1 mins read
896170a6-4b15-4bcb-b59d-43ac71b42817
கேரளா பாஜக தலைவர் கே.சுரேந்திரன். - படம்: இணையம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை எதிர்த்து கேரள பாஜக தலைவரான கே.சுரேந்திரன், 54, போட்டியிடுகிறார்.

இவர் தன் மீதுள்ள வழக்குகள் விவரம் குறித்து, கட்சி இதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளின் விவரங்களை விளம்பரப்படுத்துவது கட்டாயம்.

அவர் மீது மொத்தம் 242 வழக்குகள் உள்ளன. இதில் 237 வழக்குகள் கடந்த 2018ல் நடைபெற்ற சபரிமலை போராட்டம் தொடர்புடையவை. இந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இது குறித்து எக்ஸ் தளத்தில் பாஜக தேசிய செயலாளர் சந்தோஷ், ‘‘நாட்டின் சில பகுதிகளில் தேசியவாதியாக இருப்பது மிகவும் சிரமம். இது அன்றாட போராட்டம். ஆனால் போராட தகுதியான சம்பவங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, எர்ணாகுளம் தொகுதி பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில், ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தொடர்ந்து 2வது முறையாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2020ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சுரேந்திரன், 2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 4 முறை சட்டமன்றத் தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்