டெல்லி: தமிழ்நாட்டின் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 17 கிமீ துரத்தில் உள்ளது கச்சத்தீவு.
ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இருந்தது. தமிழ்நாட்டு மீனவர்களால்தான் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயமும் கட்டப்பட்டது. கச்சத்தீவுக்கான உரிமையை அண்டை நாடான இலங்கையும் கோரிவந்தது.
கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு மத்திய அரசால் தாரைவார்க்கப்பட்டது. அன்று முதலே கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரவுகளைப் பெற்றிருந்தார். அதில் இந்த ஒப்பந்தம் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்ற புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் ஆங்கில நாளேடுகளில் வெளியான நிலையில், அதை மோடி சுட்டிக்காட்டி காங்கிரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையிலேயே கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974ஆம் ஆண்டு இந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இலங்கையில் பாகிஸ்தான் விமானத் தளம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என அப்போது இலங்கைப் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகவிடம் அழுத்தம் தந்த இந்திரா காந்தி அதற்கு பிரதிபலனாக இந்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
அன்றைக்கு தமிழ்நாட்டு திமுக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுமே கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த இந்திராவின் நடவடிக்கையை மிக கடுமையாகவே எதிர்த்தனர் என்பது வரலாறு.
தொடர்புடைய செய்திகள்
இதனால் 1976ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்கள் பங்கேற்கலாம்; தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர வைக்கலாம் என்பது உள்ளிட்ட சரத்துகள் சேர்க்கப்பட்டன. ஆனால் இலங்கை அரசு இந்த சரத்துகளை இன்றளவும் மதிப்பதில்லை. இதனால் வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் ரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.