ஏப்ரல் 15 வரை கெஜ்ரிவாலுக்குச் சிறை: இந்திய ஊடகங்கள்

கெஜ்ரிவாலை தேர்தல் முடியும் வரை சிறையில் வைப்பதே பாஜகவின் திட்டம்: மனைவி சுனிதா

புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மதுபான ஊழல் வழக்கு தொடர்பில் திங்கட்கிழமை (ஏப்ரல் 1), இந்திய நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்டதாக அவை கூறின.

முன்னதாக, டெல்லி நகரில் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் திரு கெஜ்ரிவாலைக் கைது செய்து ஏப்ரல் 1ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கில் அவர் தவறாகக் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் குறைகூறினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கமும் பாரதிய ஜனதா கட்சியும் அதை நிராகரித்தன.

திரு கெஜ்ரிவால் விசாரணையில் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரது பதில்கள் தட்டிக்கழிக்கும் வகையில் அமைந்திருந்தன என்றும் ஊழல் விசாரணைப் பிரிவின் வழக்கறிஞர்கள் கூறியதாக ‘லைவ் லா’ எனும் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

இதற்கிடையே, திரு கெஜ்ரிவால் தமது கைது நடவடிக்கை தொடர்பில் பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.

நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில், “பிரதமரின் செயல்கள் நாட்டு நலனுக்கு உகந்தவை அல்ல,” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் கூறின.

இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தல் முடியும்வரை கெஜ்ரிவாலை சிறையில் வைக்கவேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கெஜ்ரிவால், “அமலாக்கத் துறையின் விசாரணை முடிவடைந்துவிட்டது. அவர் குற்றம் இழைத்தார் என நீதிமன்றம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் அவரை சிறையில் அடைக்கவேண்டும்?

“மக்களவைத் தேர்தல் முடியும்வரை அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்,” எனச் சாடினார்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி, “கெஜ்ரிவாலை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். கெஜ்ரிவாலை பாதிக்கப்பட்டவர்போல் சித்திரிக்க முயல்பவர்கள் இதை உணரவேண்டும்,” என்றார்.

இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஒரு ராப்ரி தேவி உருவாகிக்கொண்டிருக்கிறார். கடந்த 10 நாள்களாக மூன்று நான்கு முறை இதனை நான் வெளிப்படையாகக் கூறிவிட்டேன். விரைவில் ராப்ரி தேவி வெளியே வருவார். அதாவது, சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகப் பதவியேற்பார்.

“எந்த அரசாவது சிறையில் இருந்தபடி செயல்பட்டது உண்டா? டெல்லியின் மூன்று அமைச்சர்கள் ஏற்கெனவே சிறையில் இருந்து வருகின்றனர்,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!