திருப்பதி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்பாபு ரெட்டி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட ஆடவர்களுக்கு ஒரு குவாட்டர் மதுபானம், கோழி பிரியாணியுடன் ரூ.500 பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர், கட்சியினர் மது அருந்தும் காட்சிகளை காணொளியாக எடுத்து வெளியிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப் படுவதாகவும் இதற்காக ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய் அளவில் மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டிலும் கோழி பிரியாணி பொட்டலம், ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அவற்றை பகிரங்கமாக விநியோகித்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்து மதுவைக் குடிக்கத் தொடங்கினர். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

