புதுடெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் குன்றியிருப்பதாக அவரது ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அவர் மார்ச் 21ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதை அடுத்து, 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாக அக்கட்சி கூறியது.
இதை திகார் சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். திரு கெஜ்ரிவால் நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
திரு கெஜ்ரிவாலின் உடல்நிலை மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் கூறினர். வீட்டில் சமைக்கப்படும் உணவு அவருக்கு பரிமாறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவசரநிலை ஏதும் ஏற்பட்டால் திரு கெஜ்ரிவாலுக்கு உடனடி உதவி வழங்க மருத்துவக் குழு ஒன்றை அவரது சிறை அறைக்கு அருகில் தயார்நிலையில் வைத்திருப்பாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய வழக்கு தொடர்பாக திரு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை அவர் திகார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

