பெங்களூரு: நாடாளுமன்றத் தேர்தலில் மைசூரு குடகு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் (32) போட்டியிடுகிறார்.
அவர் ஏப்ரல் 1ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு மொத்தமாக ரூ.4.99 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தன் மனைவி திரிஷிகா குமாரியிடம் ரூ.1.4 கோடி மதிப்பிலான சொத்துகளும், தன் மகன் ஆத்வீரிடம் ரூ.3.63 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.
மேலும், தன்னிடம் ரூ. 3.4 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கமும், 20 கிலோ வெள்ளியும் இருக்கிறது. தன் மனைவியிடம் ரூ. 1.02 கோடி மதிப்பிலான விலை மதிப்புமிக்க நகைகள் இருக்கின்றன. தன் பெயரில் ரூ.1.36 கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்களும், வங்கி கணக்கில் ரூ.1 லட்சமும் இருக்கிறது.
அதேவேளையில் மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் தனக்கு சொந்தமாக கார், வீடு மற்றும் நிலம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணா, “தேர்தலில் போட்டியிடும்போதே மகாராஜா பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவருக்கு சொந்தமாக கார், வீடு இல்லை என சொன்னால் யாரேனும் நம்புவார்களா? மைசூரு,பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் இருக்கும் அரண்மனையில் தானே அவர் வசிக்கிறார். அந்த அரண்மனைகள் யாருக்குசொந்தமானவை? எத்தனை விதமான வெளிநாட்டு கார்களை பயன்படுத்துகிறார் என அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பொய்யான தகவல்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்,” என விமர்சித்துள்ளார்.