காங்கிரஸ் கட்சி தேய்கிறது; முக்கிய தலைவரும் விலகினார்

காங்கிரஸ் கட்சி தேய்கிறது; முக்கிய தலைவரும் விலகினார்

2 mins read
28d6c9df-29e8-4700-b89f-23c47bc21375
காங்கிரஸ் கட்சி பயணிக்கும் பாதை தெரியவில்லை என்று கூறியுள்ளார் கௌரவ் வல்லப். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. அக்கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருகின்றனர்.

தற்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளருமான கௌரவ் வல்லப் கட்சியிலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 4) அன்று அறிவித்துள்ளார்.

சில மணி நேரத்துக்கு முன்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

திரு கௌரவ் வல்லப், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி மற்றும் பொருளியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று காங்கிரசுக்கு பலம் சேர்த்து வந்தார்.

இந்த நிலையில் கௌரவ் தனது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலில், “இலக்கு இல்லாத பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறவோ, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது,” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிராக பேசும்போது கட்சி அமைதியாக இருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தவறான பாதைக்குச் சென்றுவிட்டது. ஒரு பக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறது. இன்னொரு பக்கம் இந்து சமூகத்தை கட்சி எதிர்க்கிறது. இந்த மாதிரியான கொள்கைகள் கட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மதத்தை மட்டுமே ஆதரிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை மக்களுக்குக் கடத்துகிறது. இது காங்கிரசின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது,” என்று தமது பதவி விலகல் காரணத்தை கௌரவ் வல்லப் விளக்கியுள்ளார்.

திரு கௌரவ் வல்லப் வியாழக்கிழமை தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் அக்கட்சியில் சேர்ந்தார்.

கௌரவ் வல்லப் முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநில ஜம்ஷட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அரசியலில் களம் புகுந்தார். 2023ல் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கௌரவ் வல்லப் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது பாஜக வேட்பாளரிடம் அவர் தோல்வியுற்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சஞ்சய் நிருபம், “நேற்று இரவே (புதன் இரவு) கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டேன். ஆனால் வியாழக்கிழமை காலை என்னை கட்சியிலிருந்து நீக்குவதாகக் கூறியுள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கௌரவ் வல்லப் பாஜகவில் இணைந்தார்.
பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கௌரவ் வல்லப் பாஜகவில் இணைந்தார். - படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்