புதுடெல்லி: டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவரது கருத்துகள் குறித்து பாஜக புகார் அளித்துள்ளதாகக் கூறிய தேர்தல் ஆணையம், இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு ஆம் ஆத்மி தலைவரைக் கேட்டுக்கொண்டது.
“பாஜகவினர் தங்கள் கட்சியில் சேரும்படி என்னை அணுகினர். கட்சியில் சேராவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டுச் சென்றனர்.
“எனது நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் என்னை அணுகிய அவர்கள், பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மியை வீழ்த்தி அழிக்க விரும்புவதாகக் கூறினர்,” என்று அண்மையில் அதிஷி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அதிஷி கூறியதற்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர்கள் என்ன சொன்னாலும் வாக்காளர்கள் அதை நம்புகிறார்கள். அதனால், அவர்களது கருத்துகளில் உண்மைத் தன்மை இருப்பது முக்கியம்.
“அதிஷி ஓர் அமைச்சராக இருப்பதால், வாக்காளர்கள் அவர் பொதுவில் சொல்வதை நம்புவதாகவும், போட்டியிட்டால் அவர் தனது கருத்துகளை உண்மைத் தன்மையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
“எனவே, இதுகுறித்து அதிஷி இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் பதிலளிக்கவேண்டும்,” என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

