பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு: ராகுல் காந்தி

பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு: ராகுல் காந்தி

3 mins read
1aed83e5-ef1f-4278-a2a6-3836c48fc012
நீட், கியூட் தேர்வுகள் கட்டாயமில்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர்கள் சேர்க்கையை கடைப்பிடிக்கலாம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) வெளியிடப்பட்டது.

கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறினார்.

‘நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்பன உள்ளிட்ட முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கைக் குழு, தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது. மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையத்தளம், மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். இதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது.

“இந்த தேர்தல் அறிக்கை வேலை, வளம், நலத்திட்டம் எனும் மூன்று சக்திவாய்ந்த வார்த்தைகளைக் கொண்டுள்ளது,” என்று நிகழ்வில் பேசிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப.சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் நாடு முழுவதும் பள்ளிக்கல்வி இலவசம்.

* மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமில்லை. நீட் மற்றும் கியூட் தேர்வை மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம். மாநில அரசுகளே தங்களுக்கான தேர்வு முறைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் அமல்படுத்தப்படும்.

* தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

* உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.

* ரயில்களில் முதியோருக்கு ரத்து செய்யப்பட்ட கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.

* புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலி நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

* முன்னேறிய பிரிவினரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத்துப் பிரிவினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

* ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சட்டம் இயற்றப்படும்.

* விளையாட்டில் சிறந்து விளங்கும் 21 வயதுக்கு உட்பட்ட இளையவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறை கொண்டு வரப்படாது.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்