ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், சுரு பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மற்ற கட்சிகளைப் போல் வெற்று அறிக்கைகளை வெளியிட மாட்டோம். பாஜக நிச்சயம் சொல்வதைச் செய்யும், செய்வதையே சொல்லும்,” என்று கூறினார்.
கொவிட்-19 போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டம் தொடர்ந்தபோது, இந்தியா அழிந்து விடும் என நினைத்தனர்.
ஆனால், அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் உலகின் 5வது பொருளியல் நாடாக இந்தியாவை மாற்றினோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாதம் 19ஆம் தேதி 12 தொகுதிகளுக்கும் 26ஆம் தேதி 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து, சுரு நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரதமர் மோடி பேசியபோது , “இந்தியா எப்படி இந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்க்கிறது. “நமது இந்திய மண் கொஞ்சம் வித்தியாசமானது என அவர்களுக்குத் தெரியாது. நாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை நம்மால் சாதித்துக் காட்ட முடியும்.
“பாரதிய ஜனதா மற்ற கட்சிகளைப் போல் வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் கொடுக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். தீர்மான அறிக்கையாக வாக்குறுதிகளை வழங்குவோம்.
“கடந்த 2019ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவியாக உள்ளது. மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை, ஒவ்வோர் இஸ்லாமியக் குடும்பத்தையும் பாதுகாத்துள்ளார்,” என அவர் மேலும் பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளாக நாடு மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்ததே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதற்கு முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் இப்போதைய வளர்ச்சியைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பதாக பெருமிதப்பட்டார்.

